“இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும்” - திருமாவளவன் வலியுறுத்தல்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் உடனடியாக அறங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.

ம.தி.மு.க. உட்கட்சித் தேர்தலில் வைகோ மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையொட்டி வைகோவின் அண்ணா நகர் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.

வைகோ - திருமாவளவன்
வைகோ - திருமாவளவன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் “மீண்டும் பொதுச்செயலாளராக வைகோ தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தமிழக அரசியலில் வைகோ எப்போதும் முதன்மையாக இருந்து வருகிறார். எனவே நேரில் வாழ்த்து தெரிவித்தோம். பெரியார், அண்ணா கொள்கைகளை இன்றளவும் மதிமுக பின்பற்றி வருகிறது. திராவிட இயக்க அரசியல், சமூக நீதி பாதுகாக்கும் இயக்கத்தில் மதிமுக உடன் விசிக துணை நிற்கும்.

43,000 திருக்கோவில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட வேண்டும். இதில் பட்டியலின பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

வைகோ மற்றும் திருமாவளவன்
வைகோ மற்றும் திருமாவளவன்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், ''மதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது. கட்சியில் மாவட்டம், மாநில அளவில் உட்கட்சி தேர்தல் ஒற்றுமையாக முடிந்து இருக்கிறது. இன்று விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள் எனக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் விசிக பலமாக மாறி வருகிறது. பிற மாநிலத்தில் கூட விசிக கட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இலங்கையில் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு தொடர்பு இருக்கலாம். இந்திய அரசு இதில் தலையிட வேண்டும்'' என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com