வந்தே மாதரம் பாடல் விவகாரம் - திருமாவளவன் கடும் கண்டனம்

வந்தே மாதரம் பாடல் விவகாரம் - திருமாவளவன் கடும் கண்டனம்

வந்தே மாதரம் பாடல் விவகாரம் - திருமாவளவன் கடும் கண்டனம்
Published on

நேரு காலத்திலேயே விவாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒன்றை மீண்டும் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையதில்லை என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

"வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருவர் விடையளித்திருக்கிறார். வங்க மொழியில் எழுதப்பட்டது என்று அவர் அளித்த விடை தவறானது என்று அவருக்கு மதிப்பெண் அளிக்கப்படவில்லை. இதை எதிர்த்து தேர்வு எழுதியவர் வழக்கு தொடுத்துள்ளார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அது வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என்றும் பின்னர் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டது என்றும் தீர்ப்பு அளித்து இருக்கிறார். அந்த மாணவரின் விடை சரியன்றும் அவருக்கு உரிய மதிப்பெண் அளித்து வேலை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்திருப்பதை வரவேற்று பாராட்டுகிறோம்.

ஆனால் அவருடைய கோரிக்கையை தாண்டி உயர்நீதிமன்றம், ‘வந்தே மாதரம்’ பாடலை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இது நாட்டுப்பற்று மிகுந்த பாடல் என்றும் விளக்கம் அளித்துள்ளது. "நாடு விடுதலை பெற்ற போதே இந்த விவாதம் நடந்திருக்கிறது. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகள் பேசும் அனைத்து இனங்களையும் ஒருங்கிணைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்றும் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல் அவ்வாறு அனைத்து இனங்களையும் ஒருங்கிணைக்கக் கூடியதாக இல்லை என்றும் முடிவு செய்து தாகூரின் பாடலையே தேசிய கீதமாக ஏற்கப்பட்டது. வந்தே மாதரம் பாடல் குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டுமே சார்ந்ததாகவும் வங்க மொழி பேசும் குறிப்பிட்ட ஒரு இனத்தை சார்ந்ததாகவும் அமைந்திருப்பதால் அது தவிர்க்கப்பட்டது. 

குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் அந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஜவஹர்லால் நேரு முழுப்பாடலை ஏற்கவில்லை என்றாலும் முதல் இரண்டு வரிகளை பாடலாம் என்று கருத்து தெரிவித்தார். ஆனாலும் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. எனவே வந்தே மாதரம் பாடலை அப்போதே அனைவரும் ஏற்கவில்லை. இப்படி ஏற்கனவே விவாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒன்றை மீண்டும் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையதில்லை. எல்லா நாட்களிலும் பாட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் வாரத்தில் ஓரிரு நாட்களாவது பாட வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இதை மக்கள் பின்பற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. எனினும் அதிதீவிர இந்துக்கள் சிலர் இந்த பாடலை இன்றும் பாடுகிறார்கள். காரணம் இந்த பாடலில் காளி, துர்க்கை போன்ற தெய்வங்களை பற்றி பாடியிருப்பதால் அதனை அவர்கள் பின் பற்றுகின்றனர்." என திருமாவளவன் தெரிவித்தார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com