“இவிஎம்-ஐ பயன்படுத்தி பாஜக ஏதோ சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாக எண்ணத்தோன்றுகிறது” - திருமாவளவன்

"தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது, தாங்கள் வலிமையோடு இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் பாஜகவின் வாடிக்கையாகும்" திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்pt web

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் நாடு முழுவதும் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. தமிழகத்திலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப்பங்கீடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேசமயத்தில் நாடுமுழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி, INDIA எனும் கூட்டணிகளின் கீழ் கட்சிகள் அணிவகுத்துள்ளன. ஆனாலும் INDIA கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்து சில மாநிலங்களில் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவாகாத நிலையில் இன்னும் பேச்சுவார்த்தைகளே நடந்த வண்ணம் உள்ளது.

குடிசையில்லா தமிழ்நாடு

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டெல்லியில் புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் மேற்கண்ட விஷயங்கள் அனைத்திலும் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது, “தமிழக நிதிநிலை அறிக்கையை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் வரவேற்று பாராட்ட மாட்டார்கள். இது அனைவரும் அறிந்த உண்மை. விசிகவைப் பொறுத்தவரை தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை மனப்பூர்வமாக வரவேற்று பாராட்டுகிறோம். குறிப்பாக குடிசையில்லா தமிழ்நாடு எனும் திட்டம் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. ரூ.3.5 லட்சம் மதிப்பீல் வீடுகள் கட்டப்படும்.. 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் சொல்லியுள்ளது.

2010 ஆம் ஆண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், அன்றைய சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விடுத்த வேண்டுகோளை ஏற்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி குடிசையில்லா தமிழ்நாடு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பலலட்சம் வீடுகளையும் கட்டிக்கொடுத்தார். இடையில் அதிமுக அரசு வந்ததனால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது மீண்டும் அத்திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கும் முதலமைச்சர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது, திட்டத்தை வரவேற்கிறது.

INDIA கூட்டணி

INDIA கூட்டணியில் பல்வேறு மாநிலக்கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 28 கட்சிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் போன்ற ஒருசில கட்சிகள் தான் தேசியக் கட்சிகள் எனும் அடையாளத்தைக் கொண்டுள்ளன. மற்ற அனைத்தும் மாநிலக் கட்சிகள் தான். மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் சூழல் மாறுபடுகிறது. மேற்குவங்கத்தில் காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ், கேரளாவில் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பஞ்சாப்பில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி போன்ற கட்சிகளுக்கு இடையே இடைவெளி உள்ளது.

இந்த குறைபாடுகளை ஏற்கனவே அறிந்திருந்த நிலையில்தான், குறைபாடுகளோடு ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளோம். குறைபாடுகள் எதுவும் தெரியாமல் இல்லை. குறைபாடுகளை எல்லாம் கடந்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர விடக்கூடாது என்ற ஒற்றைச் செயல்திட்டத்தை முன்வைத்து, தேர்தலுக்கு பின்னாலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற புரிதலுடன் கூட்டணி உருவாகியுள்ளது. குறைபாடுகள் எந்த வகையிலும் INDIA கூட்டணியின் நோக்கத்தை பாதிக்காது.

யார் வெற்றி பெற்றலும் INDIA கூட்டணி ஆட்சி அமைப்பதற்குத்தான் ஒத்துழைப்பார்கள். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெறும் எம்.பிக்களும் INDIA கூட்டணி ஆட்சி அமைப்பதற்குத்தான் பயன்படுவார்கள். இந்த புரிதலுடன் தான் கூட்டணி உருவாகியுள்ளது. அதனால் கூட்டணியின் பிரதான நோக்கம் எந்த வகையிலும் பாதிக்காது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை மாற்றம் என்பது காங்கிரஸ் கட்சியின் நலன்களை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள முடிவு. நீண்ட காலமாக தலைமை மாற்றம் எனும் கருத்து இருந்து வந்துள்ளது. தற்போது புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

முதல்வர் ஸ்டாலின் - திருமாவளவன்
முதல்வர் ஸ்டாலின் - திருமாவளவன்pt web

தமிழகத்தில் திமுக கூட்டணி

தமிழகத்தில் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை ஓரிரு வாரங்களில் தீவிரமடையும். திமுக கூட்டணியைப் பொறுத்தவரை எல்லா கட்சிகளும் ஒருமித்த புரிதலுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஆகவே, நாங்கள் கோரிக்கை வைத்து அதில் பிடிவாதமாக நின்று கூட்டணியில் எவ்விதமான குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான சூழலும் கிடையாது. எங்களது அனைவரது நோக்கமும் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பது தான். அதிமுகவும் பாஜகவும் இன்னும் கூட்டணியாக (தனித்தனி) உருவாகவில்லை, நாங்கள் கூட்டணியாகவே இருக்கிறோம்” என்றார்.

கேள்வி: பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைகிறார்கள். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற விஷயங்கள் எந்த அளவிற்கு INDIA கூட்டணியை பாதிக்கும்.

பதில்: பாஜக எல்லா மாநிலங்களிலும் செய்யும் அரசியல் கூத்து இது. தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது, தாங்கள் வலிமையோடு இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் பாஜகவின் வாடிக்கையாகும். அதனால் அவர்கள் சாதித்துவிடப்போவதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அவர்கள் என்ன நாடக அரசியலை அரங்கேற்றினாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாது. தமிழக மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடிTwitter

பாஜக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என்று கூறுகிறார்கள். பிரதமர் மோடியே நாடாளுமன்ற அவையில் இதே கருத்தை உரத்துப் பேசினார். அதுதான் எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி ஏதோ சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாக எண்ணத்தோன்றுகிறது. ஆனால் மக்கள் வெகுண்டெழுந்தால் இவிஎம் சதித்திட்டத்தை முறியடித்துவிட முடியும். 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்துக்கள் தான். எனவே இந்துக்கள் மோடி அரசுக்கு எதிராக வெகுண்டெழுவார்கள். சனாதன சங்பரிவார கும்பலை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com