“ஆளுநர் கையொப்பம் இடாததால் அமித்ஷாவை சந்தித்தோம்” - அற்புதம்மாள்

“ஆளுநர் கையொப்பம் இடாததால் அமித்ஷாவை சந்தித்தோம்” - அற்புதம்மாள்
“ஆளுநர் கையொப்பம் இடாததால் அமித்ஷாவை சந்தித்தோம்” - அற்புதம்மாள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நிலுவையில் உள்ள மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வழிகாட்டுதல் தர, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்ததாக திருமாவளவன் தெரிவித்தார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எம்.பி தொல்.திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடன் இருந்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனு மீது பத்து மாதங்களான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நிலுவையில் உள்ள மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க, வழிகாட்டுதல் தர அமைச்சர் அமித்ஷாவிடம் வேண்டுகோள் வைத்தோம்.

பேரறிவாளை பொறுத்தவரை குற்றமற்றவர் என விசாரணை அதிகாரியே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்தோம். உரியவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமித் ஷா தெரிவித்தார். இதனால் ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை என மத்திய அரசு கேட்பதற்கு வாய்ப்பிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த தயக்கம், தற்போதைய ஆட்சியின்போதும் இருக்கிறது.” என்றார்.

அப்போது பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், “ பேரறிவாளனை பொறுத்தவரை குற்றமற்றவர் என்ற பிரமாண வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி அளித்துள்ளார். அப்போதே பேரறிவாளன் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்த்தேன், ஆனால் நடக்கவில்லை. 10 மாதங்களாகியும் ஆளுநர் கையொப்பமிடாத நிலையில், உள்துறை அமைச்சரைச் சந்தித்துள்ளோம்.

28 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகும், சிறையில் மகனது வாழ்க்கை கழிகிறது. விடுவிக்கலாம் என அறிவித்த பிறகும், சிறையில் இருக்கும் நிலை தொடர்கிறது. ஆளுநர் கையொப்பமிட்டால் விடுதலை என உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டது, வேறெங்கு செல்ல முடியும்?, அடுத்த வாரம் மீண்டும் தமிழக முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கைவிடுப்பேன்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com