தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட ரூ.6 லட்சம் செலவு
தாய்லாந்தில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி இன்றுவரை ஆசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தாய்லாந்து சென்றார்.
பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியாக தலைநகர் பாங்காக் நகரில் அமைந்துள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் தாய்லாந்து வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் வெளியிட்டார்.
இந்த மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றி புதிய தலைமுறைக்கு சுவித் விபுல்ஷ்ரேஸ்த், பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் சென்னைக்கு சென்றிருந்தபோது திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராஜாராம் என்பவர் எழுதிய புத்தகத்தை படித்தேன். அவரது மொழிபெயர்ப்பு புரியும் வகையில் எளிதாக இருந்தது. பின்னர் அந்தப் புத்தகத்தின் துணையுடன் ஆங்கிலத்தில் இருந்து தாய்லாந்து மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தேன்.
இதை அறிந்த தாய்லாந்து தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தேவதாஸ் என்னைத் தொடர்புகொண்டு, அதை புத்தகமாக வெளியிடுவதற்கான உதவிகளை வழங்கினார். தாய்லாந்து மொழிக்கான திருக்குறளின் காப்புரிமையை எனது பெயரில் பெற்று வெளியிட்டுள்ளோம். தற்போது தாய்லாந்தில் திருக்குறளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது” எனக் கூறியுள்ளார். இவர்தான் திருக்குறளை தாய்லாந்து மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இவர் ஒரு விண்வெளி பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தேவதாஸ்தான், இதற்காக முற்சிகளை தங்கள் சங்கத்தின் மூலம் முன்னெடுத்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து அவர், “தாய்லாந்து மொழிக்கு குறளை கொண்டு சென்ற பெருமை எங்கள் சங்கத்தினரையே சாரும். இதற்காக ஏறக்குறை ஆறு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

