திருச்செங்கோடு | பொதுத் தேர்வு எழுதிய இரண்டு மகன்களும் தோல்வி – விரக்தியில் தந்தை விபரீத முடிவு
செய்தியாளர்: L.M.மனோஜ்கண்ணா
திருச்செங்கோடு அடுத்த ஆண்டிராபட்டி அருகே உள்ள குப்பாண்டம் பாளையம் ஊராட்சி வன்னியர் கோயில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் கபில் ஆனந்த் (41). லாரி டிரைவரான இவருக்கு நதியா என்ற மனைவியும் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஹரி ரஞ்சித் என்ற மகனும், அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தனது மகன்கள் இருவரும் தேர்ச்சி பெறவில்லை.
இதனால் கபில் ஆனந்த் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். தான் படிக்கவில்லை, தனது மகன்களாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த கபில் ஆனந்த், திடீரென வீட்டுக்குள் சென்ற கபில் ஆனந்த் கதவை சாத்திவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் திடீரென வீட்டுக்குள் ஓடுவதை கண்ட மனைவி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வந்து கதவை உடைத்து கபில் ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது கபில் ஆனந்த் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கபட்டது. இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு ஊரக போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். தனது மகன்கள் 2 பேரும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆன்ட்றாபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.