திருச்செந்தூர்: துயரத்தில் இருந்து மீளும் தெய்வானை யானை...! #Video
செய்தியாளர்: சுடலை செல்வன்
துயர சம்பவத்திற்கு பின் முதல் முதலாக கேமராவை பார்த்து தும்பிக்கையை ஆட்டி உற்சாகமாக நடனமாடியது தெய்வானை யானை. அது ஒளிந்து விளையாடி காட்சிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் தெய்வானை யானை மிதித்ததில், அதன் பாகனும், பாகனின் உறவினரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த 18ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், பாகன் உயிரிழந்தது கூட தெரியாமல், தெய்வானை யானை அவரை எழுப்ப முயன்ற காட்சிகளும் வெளியாகி இருந்தது.
இதையடுத்து கோவிலில் வளாகப்பகுதியில் யானைக்கென்று 30 லட்சம் மதிப்பில் தனியாக அமைக்கப்பட்டிருக்கும் குளியல் தொட்டியில் தினமும் உற்சாகமாக குளித்து வந்த தெய்வானை, இந்த சம்பவத்திற்கு தனி அறையில் வைத்து கவனிக்கப்பட்டு வருகிறது. தெய்வானையை பொதுமக்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, யானையை பார்வையிட்டு, அதன் பாகன்களிடம் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, யானையை அடைத்து வைத்திருந்த இரும்பு வளையின் கதவு திறக்கப்பட்டு உள்ளே சென்ற அமைச்சர், தெய்வானைக்கு கரும்பு வழங்கினார்.
வீடியோ எடுத்தபோது, கேமராவை பார்த்ததும் தெய்வானை யானை உற்சாகமாக நடனமாடியது. துதிக்கையை ஆட்டியும், தலையை அசைத்தும், அங்குமிங்குமாக நகர்ந்தும் விளையாடி மகிழ்ந்தது. தொடர்ந்து, கொடுக்கப்பட்ட கரும்பையும் சாப்பிட்டு மகிழ்ந்தது தெய்வானை. கடந்த 18 ஆம் தேதி நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு, சோர்வாகவும், சோகமாகவும் காணப்பட்ட தெய்வானை, இரும்பு கதவை திறந்ததும் உற்சாகி நடனமாடிய காட்சிகள் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.