'சோழர் காலத்தில் தமிழ்நாடு என்ற ஒன்றே கிடையாது' - பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் பதிலடி

'சோழர் காலத்தில் தமிழ்நாடு என்ற ஒன்றே கிடையாது' - பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் பதிலடி
'சோழர் காலத்தில் தமிழ்நாடு என்ற ஒன்றே கிடையாது' - பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் பதிலடி

'ராஜராஜ சோழன் இந்து மன்னன் இல்லை என்றால் தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோவிலை எப்படி கட்டி இருக்க முடியும்?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சினிமா இயக்குநர் வெற்றிமாறன், ''தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது'' என்று பேசினார். இவரது கருத்திற்கு பாஜக, இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனைத்தொடர்ந்து  ராஜராஜ சோழன் இந்து அல்ல என ஒரு தரப்பும், அவர் இந்துதான் என்று மற்றொரு தரப்பும் வாதிட்டு வரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், வெற்றி மாறனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற வார்த்தையே கிடையாது என்றும், சைவம், வைணவம் என்றுதான் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், '' அந்தக்காலத்தில் தமிழ்நாடு என்ற ஒன்றே கிடையாது. சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, சேர நாடு என்றுதான் இருந்தன. சோழ மன்னர்கள் ஆண்ட போது தமிழ்நாடு என்ற ஒன்று இல்லாத சூழலில் ராஜராஜ சோழன் எப்படி திராவிட மன்னனாக இருக்க முடியும்? ராஜராஜ சோழன் இந்து மன்னன் இல்லை என்றால் தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோவிலை எப்படி கட்டி இருக்க முடியும்? இவ்வாறிருக்கையில் ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா என்ற விவாதத்தை முட்டாள்கள் தொடங்கிவிட்டனர். ஊழலும், பாரபட்சமும் சேர்ந்ததுதான் திராவிடம்'' என்று அவர் கூறினார்.

முன்னதாக இவ்விவகாரம் குறித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறுகையில், ''ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் அவர் கட்டிய தேவாலயங்கள், மசூதிகள் எங்கே உள்ளன?'' என்று கேள்வியெழுப்பினார்.

இதையும் படிக்க: `பதிலுக்கு பதில் பேசாமல், அன்பால் திமுக அவப்பிரச்சாரத்தை முறியடிப்பதே என் பணி’- அண்ணாமலை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com