ஒருவேளை உணவுக்கும் வழியில்லை - வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளிக் குடும்பம்..!

ஒருவேளை உணவுக்கும் வழியில்லை - வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளிக் குடும்பம்..!
ஒருவேளை உணவுக்கும் வழியில்லை - வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளிக் குடும்பம்..!

நாகை மாவட்டத்தில் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல், சாக்குப்பை கீற்றுக்குள் ஒரு குடும்பம் வறுமையால் வாடி வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள திருமாளத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் மனைவி சந்தனம்மாள் வாய் பேசமுடியாதவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் மன வளர்ச்சி குன்றிய நிலையில் படுக்கையிலே இருக்கிறான். 6 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரவி ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டதால், அவருக்கு வலது காலும், வலது கையும் செயல்படாமல் போனது.

இதனால் அவர் கூலி வேலைக்கும் செல்ல முடியவில்லை. போதிய வருமானம் இல்லாததால் கடுமையான வறுமையில் உள்ள இக்குடும்பம் சாக்குப்பைகளை நாலாபுறமும் கட்டி, வெயிலிலும் மழையிலும் வாடிக்கொண்டிருக்கிறது. சரி நிவாரணத்தொகையைப் பயன்படுத்தி பிழைப்பை நடத்தலாம் என்றால் கடந்த கஜா புயலின் போது குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை குளத்தில் விழுந்து காணாமல் போனதாகவும், அன்றிலிருந்து அருகில் உள்ளவர்கள்தான் தங்களுக்கு அரிசி தந்து உதவி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போதும் அதற்கும் வழியில்லாமல் இருக்கிறது. இதனால் ஒருவேளை உணவுக்குக் கூட அவர்கள் அல்லோலப்படும் நெருக்கடியானச் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசு இவர்களின் கடுமையான வறுமைச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com