“கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை” - கே.பி.முனுசாமி
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக தேர்தல் பரப்புரை பணிகளை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி. எந்த தேசிய கட்சி இப்படி பேசி கூட்டணிக்கு வந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு தேவையில்லை. ஜெயலலிதா, கருணாநிதி என்ற ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலன் பெறலாம் என சிலர் நினைக்கின்றனர். எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிட முடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.