'பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பில் பின்னடைவு இல்லை' - கே.பி. முனுசாமி

'பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பில் பின்னடைவு இல்லை' - கே.பி. முனுசாமி
'பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பில் பின்னடைவு இல்லை' - கே.பி. முனுசாமி

பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பில் பின்னடைவு என்பது இல்லை, தீர்ப்பு குறித்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செயற்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் தொடுத்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வந்தது. அதில், ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நடைமுறையே தொடரும் எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக்குழுவை கூட்டலாம், தேவையானால் ஆணையரை நியமித்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், எம்சி சம்பத், பொன்னையன், ஆர்பி உதயகுமார், சி வி சண்முகம், இசக்கி சுப்பையா, ஜெயகுமார், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், பொதுக்குழு குறித்து நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால் முழுமையான தீர்ப்பின் நகல் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். ஆனால், பொதுக்குழு செயற்குழு கூட்டம் என்பது மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நடத்தியதை போன்றே முறைப்படி நடத்தப்பட்டது. ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இதன் பின் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருமனதாக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஓபிஎஸ் 100 பொதுக்குழு உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு நீதிமன்றங்களுக்கு செல்கிறார். ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள் இபிஎஸ் க்கு ஆதரவாக உள்ளனர். இதனால் வழக்கின் தீர்ப்பில் பின்னடைவு என்பது இல்லை. ஒரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com