தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நிபா வைரசால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த கேரளா மாநில அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் மலப்புரம் மாவட்டத்திலும் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில், உயர்தர ஸ்கேன் இயந்திரங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்கத்திற்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்றார். எனினும் விலங்குகள், பறவைகள் கடித்த பழங்களைச் சாப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். சேலம் தனியார் மருத்துவமனையில் உறுப்புகள் திருடப்பட்டதாக கேரள முதல்வர், தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், மருத்துவ பணிகள் இயக்குநர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.