“கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை கைது செய்ய அவசியமில்லை..” - கார்த்தி சிதம்பரம்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது ஆபாச குறுஞ்செய்தி தொடர்பான புகார் வந்த நிலையில், கைது செய்ய அவசியமில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது போதுமானது என அவர் கூறினார்.
பெண் மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் ஆட்சியரின் கணவர் புகாரளித்தும், சம்பந்தப்பட்ட ஆட்சியர் மேலிட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விமர்சிக்கப்பட்டது. ஆனால் இது வதந்தி என்றும், புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவெக அமைச்சர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.
அதேநேரம் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், இது பொய்யான தகவல். தவறான கண்ணோட்டத்தில் மெசேஜ் அனுப்பவில்லை. திமுக ஐடி விங் மூலமாக பொய் தகவல் பரப்பட்டு வருவதாக தெரிவித்தார். இன்னொரு பக்கம் சம்மந்தப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் வெளிப்படையாக எந்த புகாரும் தெரிவிக்காத நிலையில், இவ்விவகாரம் மேலும் மேலும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவே இருந்துவந்தது.
இந்தசூழலில் தான் தற்போது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் ஆட்சியர் தவெக எம்எல்ஏ மீது புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு காவல்துறை தரப்பில் சம்மனும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை கைது செய்யவேண்டிய அவசியமில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து பேசியிருக்கும் அவர், “எல்லா விஷயத்திற்கும் கைது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை; நமது நீதித்துறை அமைப்பில் தேவையில்லாமல் கைது நடக்கிறது.
ஒருவர், இன்னொருவருக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் அல்லது சாட்சியை கலைப்பார்கள் என நினைத்தால் கைது செய்யலாம். அவர் வெளியே இருப்பதால், இன்னொருவரின் உயிருக்கோ, உடமைக்கோ ஆபத்து இல்லை என காவல்துறை நினைத்தால் கைது செய்ய வேண்டாம்.
பெரும்பாலான வழக்குகளில் கைது செய்யாமலேயே விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தரலாம்" என பேசியுள்ளார்.

