ஃபேமலி போட்டோ ஒன்றிலும் அப்பா இல்லை: காவல் ஆய்வாளரின் மகன் உருக்கம்
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியின் மகன், தனது தந்தையை பற்றி உருக்கமான பல
தகவல்களை தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் நகைக்கடை மேற்கூரையை துளையிட்டு தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையர்களை தேடி ராஜஸ்தான்
மாநிலம் பாலி மாவட்டத்திற்கு தமிழக காவல்துறையினர் விரைந்தனர். ராம்வாஸ் கிராமத்தில் கொள்ளையன் நாதுராமை பிடிக்க முயன்ற போது
இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. அதில், காவல் ஆய்வாளர் பெரியபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து ஆய்வாளர் பெரியபாண்டியின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெரியபாண்டியின் மூத்த மகன் ரூபன் தனது தந்தையைக் குறித்து உருக்கமான பல தகவல்களை தெரிவித்துள்ளார். காலை வீட்டில்
தூங்கிக் கொண்டிருந்த தனக்கு, தொலைக்காட்சியில் செய்தியை பார்த்த பின்பே தனது தந்தை பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி தெரியும்
என்று கூறியுள்ளார். மேலும், கடைசி வரை அவர் தனது போலீஸ் உத்யோகத்தை உயிராக நேசித்ததாகவும், குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டதே
இல்லை என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
இறுதியாக தனது தந்தை, தன்னுடன் பேசும் போதும் விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும், கொள்ளையர்களை நெருங்கி விட்டதாக தெரிவித்தார்
என்றும் ரூபன் கூறினார். அதே போல் கடைசி வரை தனது தந்தை தங்களின் குடும்பத்தாருடன் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை எனவும்
தங்களின் வீடு முழுவதும் அவர் உயர் அதிகாரிகளிடம் மெடல், பட்டங்கள், பாராட்டு சான்றிதழ்கள் பெறும் புகைப்படங்களே நிறைந்திருப்பதாக
தெரிவித்தார். இத்தகைய பெரும் துயரத்தை தங்களின் குடும்பம் எப்படி தாங்கிக் கொள்ள போகிறது என்றும், பெரியபாண்டியின் மகன் ரூபன்
சோகத்துடன் தெரிவித்துள்ளார்