ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: கால அவகாசம் கோரிய எய்ம்ஸ் மருத்துவக் குழு
தமிழக அரசு இறுதியாக கொடுத்த ஆகஸ்ட் 3ஆம் தேதி கால அவகாசத்திற்குள் ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்ய வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை எழுதியுள்ள கடிதத்தில், அடுத்த வாரம் தான் தங்களால் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம் ஆகஸ்ட் 3-க்குள் அறிக்கை தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
ஆணையத்தில் இறுதியாக நடைபெற்ற விசாரணையின் பொழுது உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஆறு பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. மேலும் ஆணையம் விசாரணையை முடித்துள்ள நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையையும் இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவ குழு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்து வருகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் சாமி விசாரணை ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக கடிதம் ஒன்று இருக்கிறது மின்னஞ்சல் மூலமாக வந்திருக்கும் இந்த கடிதத்தில் இந்த குழுவினர் வரும் ஒன்றாம் தேதி வரை வெளிநாட்டில் இருப்பதால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
இதன் காரணமாக தமிழக அரசு இறுதியாக கொடுத்த ஆகஸ்ட் 3ஆம் தேதி கால அவகாசத்திற்குள் ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்ய வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே ஆணையம் தமிழக அரசு வழங்கிய 13வது முறை கால அவகாசமும் முடிவடையும் நிலையில் கால நீட்டிப்பு கேட்டும் விரைவில் அரசுக்கு கடிதம் எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை: ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு