
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து வத்தலகுண்டு நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது ப.விராலிப்பட்டி கிராமம் பண்ணைப்பட்டி பிரிவு அருகே பேருந்து வந்தபோது, அப்பகுதியில் மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பேருந்தை வழிமறித்து பேருந்து முன்பு நடனமாடினர். இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் நடனமாடிய இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அந்த வழியே வந்த விராலிப்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. கல்வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில் இருதரப்பையும் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்தலகுண்டு போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இளைஞர்கள் பேருந்து முன்பு நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அங்கு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.