தேனியில் நியூட்ரினோ திட்டம் எப்போது தொடங்கும்?
ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் தொடங்கப்படும் என இந்திய அணுசக்தி கழகத் தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “ நியூட்ரினோ திட்டம் தொடர்பாக உரிய அனுமதி பெற முயற்சித்து வருகிறோம். ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெறுவது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனுமதி பெற்ற உடன் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் தொடங்கப்படும் என்றார். மேலும் இரண்டாவது அணுசக்தி நீர் மூழ்கிக்கப்பல் இன்னும் ஓரிரு மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையடிவாரத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பான பணிகள் நடைபெறுகையில், பூவுலகின் நண்பர்கள் சார்பில் 2015ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டு நியூட்ரினோ திட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.