தேனி: இல்லாத காரை எங்கு போய் தேடுவது? போலீஸை மிரள வைத்த சம்பவம்!
பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி பகுதியில் வசித்து வரும் ராமமூர்த்தி, ஷீலா தம்பதி, கூலித்தொழிலாளர்களாக இருக்கிறார்கள். ஷீலா அரசின் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்த நிலையில், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களுடன் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், ஷீலா குடும்பத்தில் நான்கு சக்கர வாகனம் இருப்பதால் உரிமைத்தொகை வழங்க இயலாது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை ராமமூர்த்தி அணுகிய விதம்தான் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டதற்கு காரணத்தை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரிடம் ராமமூர்த்தி மனு அளித்துள்ளார். இந்த மனுவை ஆட்சியர், பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த மனு மீது ராமமூர்த்தியை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தன் பெயரிலோ தன் மனைவியின் பெயரிலோ இருசக்கர வாகனம்கூட இல்லாத நிலையில் கார் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. அந்த காரின் வாகன எண் எனக்கு தெரியாது அது என்ன கார் என்றும் தெரியாது. ஆனால் அரசு இருப்பதாக தெரிவித்த அந்த நான்கு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தாருங்கள் என்று காவல் நிலையத்தில் கூறியதால் காவலர்கள் செய்வது அறியாது திகைத்து உள்ளனர்.
இல்லாத காரை இருப்பதாக அரசாங்கம் தெரிவித்ததால் அந்த எங்கு சென்று தேடுவதென விழி பிதுங்கி செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள் தென்கரை காவல்துறையினர்.