தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பழங்கள் : வீட்டிற்கே சென்று வழங்கிய மாவட்ட நிர்வாகம்
தேனி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பழங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தை பொருத்தவரை 70க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வந்தவர்களை மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என தெரிய வந்தது. இருந்தபோதிலும் அவர்கள் 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக கடந்த 3 நாள்களுக்கு முன்பு பூங்கொத்து வழங்கபட்டது. இன்று மேலும் அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாகவும், நலம் விசாரிக்கும் வகையிலும் ஆப்பிள், ஆரஞ்ச், கொய்யா,திராட்சை, நெல்லி, வாழைப்பழம் ஆகிய 6 வகை பழங்கள் அடங்கிய சில்வர் தட்டுகள் தயார் செய்யபட்டு அவை ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பப்பட்டது.
மேலும் இதனுடன் சேர்ந்து சானிடைசர், HANDWASH LOTION, MASK, வைட்டமின் மாத்திரைகள், மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் என ஒரு பார்சலாக தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டன.