10 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத பேரூராட்சி: பத்தே நாளில் தீர்வு கண்ட தங்க தமிழ்செல்வன்

10 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத பேரூராட்சி: பத்தே நாளில் தீர்வு கண்ட தங்க தமிழ்செல்வன்
10 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத பேரூராட்சி: பத்தே நாளில் தீர்வு கண்ட தங்க தமிழ்செல்வன்

பத்து ஆண்டுகளாக அரசு பேருந்து வசதி இல்லாத தேனி பூதிப்புரம் பேரூராட்சிக்கு முதன்முறையாக இன்று நகர பேருந்து இயக்கப்பட்டது. அப்பேருந்து சேவையை தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் துவக்கி வைத்தார். 10 வருடங்களுக்குப் பிறகு தங்கள் பகுதிக்கு பேருந்து சேவை கிடைத்திருப்பதை தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பூதிப்புரம் என்ற பேரூராட்சி. போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த பேரூராட்சியில் சுமார் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சிக்கு உட்பட்டு 10 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அவசரத் தேவைகளுக்கும், தொழில் நிமித்தமான பணிகளுக்கும் போடிநாயக்கனூர் மற்றும் தேனிக்கு தான் அதிகம் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் அங்கு செல்வதற்கு இவர்களுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசுப் பேருந்து சேவை இல்லை. மாறாக, கூடுதல் கட்டணத்துடன் பூதிப்புரத்தில் இருந்து ஒரு சில தனியார் மினி பேருந்துகள் மட்டும் தேனிக்கு இயக்கப்பட்டு வந்தன. இதனால் அன்றாட வேலைக்கு செல்வோர் பலரும் அவதியுற்று வந்தனர்.

இதுகுறித்து கடந்த வாரம் பூதிப்புரம் பேரூராட்சி பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர்  தங்கத்தமிழ்செல்வன், “அடுத்த பத்து தினங்களுக்குள் அரசுப் பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துச் சென்றார்.

அதன்படி அவர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இன்று தேனியில் இருந்து பூதிப்புரம் வழியாக போடிக்கு அரசு பேருந்து சேவை துவக்கப்பட்டது. அதை பூதிப்புரம் பேருந்து நிறுத்தத்தில் தங்கத்தமிழ்செல்வன் முன்னிலையில் பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேனி அரசு பணிமனையில் இருந்து  அலங்கரிக்கப்பட்ட அரசுப் பேருந்து பூதிப்புரம் சென்றபோது, பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாக பேருந்துக்கு வரவேற்பளித்தனர். பூதிப்புரம் பகுதி மக்கள் பலரும் பேருந்தில் ஏறி உற்சாகமாக பயணம் செய்தனர். பொதுமக்களுடன் தங்கத்தமிழ்செல்வன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் பேருந்தில் பயணம் செய்தனர்.

தேனியில் இருந்து பூதிப்புரம் வழியாக போடிக்கு காலை 2 முறையும், மாலை 2 முறையும் பேருந்து சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நமது புதிய தலைமுறையிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “திமுக மாவட்டச் செயலாளராக இருந்தாலும், ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் என்ற முறையில் மக்களின் தேவைகளை உணர்ந்து அதை நிறைவேற்றுவது சந்தோஷம் அளிக்கிறது” என தெரிவித்தார்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப் பேருந்து சேவைகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டிருப்பதால், இப்பகுதியை சேர்ந்த சிறுகுறு வேலை செய்யும் மக்கள் மற்றும் அன்றாட பணி நிமித்தமாக போடி செல்லும் மகளிர் பலரும் இனி மிகவும் பயன்பெறுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இக்காரணத்தால் அப்பகுதி பெண்கள் பலரும் அரசுக்கு மகிழ்ச்சியுடன் தங்களின் நன்றியை தெரிவித்து வருகின்றனர். இதுவரை கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் ஆண்கள் அனைவரும்கூட, இனி குறைந்த கட்டணத்தில் பயணப்படலாம் என்பதால் அவர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

பேருந்து எண்ணிக்கை அடுத்தடுத்த வாரங்களில் அதிகப்படுத்தப்பட்டால், தங்களுக்கு இன்னும் உபயோகமாக இருக்குமென்றும், இப்போது அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து இப்பகுதி மக்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய உதவியை நல்கும் என்றும் அவர்கள் கூறினர்.

ரமேஷ் கண்ணன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com