பாலிஷ் போட்டுத் தருவதாக கூறி திருமண வீட்டில் நகையை அடித்துச்சென்ற வடமாநிலத்தவர்கள்!

பாலிஷ் போட்டுத் தருவதாக கூறி திருமண வீட்டில் நகையை அடித்துச்சென்ற வடமாநிலத்தவர்கள்!

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூர் கிராமத்தில் இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த வீட்டில் 5 பவுன் நகையை பாலிஷ் போட்டு தருவதாக கூறி ஏமாற்றி திருடி சென்ற வடமாநில கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
Published on

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்-சாந்தி தம்பதியினர். இவர்களது மகள் பிரியா என்பவருக்கும் புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணமகன் சத்தியமூர்த்தி என்பவருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை புதுவையில் நடைபெற இருந்ததால், அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக பெண் வீட்டார் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பெண்ணின் வீட்டிற்கு வந்த இரண்டு வட மாநிலத்தவர்கள் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாகக் கூறியுள்ளனர். அதனை நம்பிய பெண்வீட்டார் 5 பவுன் நகைகளை கொண்டு வந்து கொள்ளையர்களிடம் கொடுத்த பிறகு, வீட்டுக்குள் சென்று சூடாக வெந்நீர் எடுத்து வாருங்கள் என்று கூறிய கொள்ளையர்கள் பெண் வீட்டாரை திசைதிருப்பி நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

திருமண வீட்டார் கூச்சலிட்டவுடன் அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கஷ்டப்பட்டு நகைகளை சேர்த்து மகளுக்கு திருமணம் முடித்து வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்து நாடகமாடி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com