லாரன்ஸின் ருத்ரன் படம் பார்க்க லுங்கியோடு வந்த இளைஞர்கள்.. அனுமதி மறுத்த தியேட்டர் ஊழியர்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் எம்.கே.ஜி என்ற பெயரில் திரையரங்கம் உள்ளது. இங்கு ராகவாலாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தைக் காண திருவண்ணாமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கலம் கிராமத்திற்கு 11 இளைஞர்கள் வந்துள்ளனர்.
அதில் ஒருவர் லுங்கி கட்டிக் கொண்டு படம் பார்க்க வந்துள்ளார். இதனால் திரையரங்கு ஊழியர்கள் அவருக்கு டிக்கெட் வழங்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் திரையரங்க ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு திரையரங்கு மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
லுங்கி கட்டிக் கொண்டு திரையரங்குக்குள் செல்ல அனுமதி இல்லை என்று மேலாளரும் தெரிவித்துள்ளார். இதை எழுத்துப் பூர்வமாக எழுதித் தாருங்கள் என இளைஞர்கள் கேட்ட திரையரங்கு மேலாளரும் எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளார். இதில் சமாதானம் அடையாத இளைஞர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து திரையரங்கு மேலாளர் மங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இளைஞர்களை திரையரங்கில் இருந்து வெளியேற்றினர். இதனால் இளைஞர்கள் 11 பேரும் படம் பார்க்காமல் திரும்பிச் சென்றனர்.