காவிரி வழக்கில் தவறான அணுகுமுறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் தவறான அணுகுமுறையை கையாண்டுள்ளதாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி தொடங்கிய இறுதி விசாரணை, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை பின்பற்றவில்லை என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 2013-ல் அரசிதழில் வெளியிட்டும் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
காவிரி வழக்கில் சுமூக தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதம் செய்தது தவறான அணுகுமுறை என்றும் நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, நடுவர் மன்றத்திற்கு பதில் மேற்பார்வைக்குழு, காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மத்திய அரசு, காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று பதில் அளித்தது.