விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு தேர்தல் வைப்பு தொகை வழங்கிய எழுத்தாளர்கள்
விழுப்புரத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு எழுத்தாளர்கள் அனைவரும் இணைந்து தேர்தல் வைப்பு தொகை வழங்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளான பாரதி செம்புலம்,மருதம்,தென்பெண்ணை,பாவேந்தர் பேரவை, உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள் இணைந்து, விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளரும்,எழுத்தாளருமான ரவிக்குமாரின் தேர்தல் வைப்பு நிதிக்கான ரூபாய் 12,500 வழங்கினர்.
அப்போது பேசிய ரவிக்குமார் இந்தப் பகுதியில் எழுத்தாளர்கள், தமிழ் அமைப்பினர்கள் என் மீது வைத்திருக்கும் பற்றின் காரணமாக என் தேர்தல் வைப்பு நிதிக்கான தொகையை கொடுத்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய பாரதி செம்புலம் அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி, எழுத்துலகில் தொடர்ந்து பல்வேறு தளங்களில் இயங்கி வந்த ரவிக்குமார், தமிழ் மொழி மற்றும் மனித உரிமைகள் எனப் பல தளங்களில் தொண்டாற்றி இருக்கிறார். ஒரு எழுத்தாளராக பாராளுமன்றத்திற்குச் சென்று இதற்காக வெகு மக்களின் பிரச்னைகளை அவர் பேச வேண்டும் என்கிற நோக்கத்துடன் நாங்கள் இந்த நிதியை திரட்டி கொடுத்திருக்கிறோம் என்றார். தமிழகத்தில் தற்போது நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் இதுபோன்று பணம் திரட்டி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியிலிருந்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் போட்டியிடும் ரவிக்குமாருக்கு மொத்தம் சுமார் 9 லட்சத்து 34 ஆயிரத்து 953 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், 42 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும், வங்கியில் 13 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் கடனும் இருப்பதாகவும், தனது மனைவிக்கு 13 லட்சத்து 34 ஆயிரத்து 907 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாகவும் அவர் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.