பெரம்பலூர்: பர்ஸை பறிகொடுத்து பரிதவித்த பெண்-பணம் கொடுத்து பத்திரமாக அனுப்பிவைத்த போலீசார்
பெரம்பலூரில் தொலைதூர பேருந்தில் பர்ஸ் பணம் செல்போனை தொலைத்து கைக்குழந்தையுடன் காவல்நிலையம் வந்த பெண்ணிற்கு போலீசார் பணம் கொடுத்து அனுப்பிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (22) இவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது கைக்குழந்தையுடன் பெருங்களத்தூரில் ஹோம்ஸ் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பெருங்களத்தூரில் இருந்து அரசு பேருந்தில் தனது சொந்த ஊருக்கு பயணித்துள்ளார். அப்போது பெரம்பலூர் அருகே வந்தபோது பேக்கில் வைத்திருந்த பர்ஸ் திருடுபோனதை அறிந்த சூர்யா அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து திருடு போன பர்ஸில் 1500 ரூபாய் பணம், டிக்கெட், அடையாள அட்டை, போன்றவையும் இருந்ததால் பயணைத்தை தொடரமுடியாமல் செய்வதறியாது பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இறங்கினார். இந்நிலையில், புகார் கொடுக்கு பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு கைக்குழந்தையுடன் சென்ற சூர்யாவை போலீசார் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து சூர்யாவின் பரிதாப நிலையை அறிந்த போலீசார், பயணச் செலவுக்கு (500 ரூபாய்) பணம் கொடுத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். போலீசாரின் உதவியை பெற்றுக்கொண்ட சூர்யா திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி சொந்த ஊரை நோக்கி பயணத்தை தொடர்ந்தார்.
பர்ஸை பறிகொடுத்து பரிதாபமாக கைக்குழந்தையுடன் காவல்நிலையம் வந்த பெண்ணிற்கு போலீசார் உதவி செய்து அனுப்பி வைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.