“நான் படிப்பறிவில்லாத பெண்; எனக்கு வாக்குரிமை கூட கிடையாதா?” - கண்ணீர்விட்டு அழுத பெண்!
தனது வாக்கை வேறொரு நபர் செலுத்தியதாக குழந்தைகளுடன் கண்ணீருடன் கதறி அழுது முறையிட்ட பெண்மணிக்கு டெண்டர் ஓட்டு முறை மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் 313 மாமன்ற உறுப்பினர் பதவிகள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதிலும் உள்ள 1,615 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்தோடு வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி 42 வது வார்டுக்கான வாக்குப்பதிவு தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது, 42 வது வார்டுக்கு உட்பட்ட மதுரை தமிழன் தெரு பகுதியை சேர்ந்த வசந்தி என்பவர் தனது வாக்கை செலுத்த வந்த போது, தேர்தல் அலுவலர்கள் வசந்தியின் வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக கூறியதோடு, வெகு நேரம் காக்க வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வசந்தி குழந்தைகளை தூக்கி கொண்டு தனது வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக கூறி கண்ணீருடன் கூச்சலிட்டார்.
இது குறித்து, தேர்தல் பணியில் இருந்த அலுவலர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில் சிறிது நேர ஆலோசனைக்குப்பின் அவரை டெண்டர் ஓட்டு மூலம் வாக்களிக்க வைத்தனர். இதனால், சமாதானம் அடைந்த வசந்தி வீட்டுக்கு கிளம்பி சென்றார். டெண்டர் ஓட்டு மூலம் ஏற்கனவே வாக்களித்தவர் வாக்கும், தாளில் வாகளித்த நபரின் வாக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி முடிவின் படி செல்லத்தக்க ஒரு வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.