தமிழ் மீது தீராப்பற்று.... தெரு முழுவதும் திருக்குறள்..!
குறள் பயின்று அதன் வழி நடந்தால் குலம் உயரும் என்பதை உணர்த்தும் விதமாக, தலைநகர் சென்னையில் தெருவொன்றில் இல்லந்தோறும் குறட்பாக்களை எழுதி வைத்திருக்கின்றனர்.
மதிப்பெண்களுக்காக திருக்குறளை படித்ததோடு சரி. அதன் பிறகு அதைப் பார்த்ததே இல்லை என்போரே அதிகம். ஆனால் வள்ளுவன் தந்த கொடை, எங்கள் தெரு வழியே செல்வோர் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்று, தம் தெரு முழுவதும் திருக்குறள்களை எழுதி வைத்திருக்கிறார்கள் எம்.ஜி.ஆர் நகர், விபி அகிலன் தெருவாசிகள்.
குறுகிய இடமானாலும் குறள் எழுதத் தவறவில்லை... அதுமட்டுமின்றி நாள்தோறும் இத்தெருவைக் கடக்கும் மக்களுக்காக குறள் சொல்லும் பலகையும் இங்குண்டு... எத்தனை வேலைகள் இருந்தாலும் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு தினம் ஒரு குறள் எழுதுவதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார்கள் விபி அகிலன் தெரு மக்கள்...
சுவற்றில் வீண் விளம்பரங்கள் செய்பவர்களுக்கு மத்தியில் பொது நலனில் அக்கறை கொண்டு தங்கள் வீட்டுச் சுவர்களை திருக்குறள்களால் அலங்கரித்திருப்பவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

