கர்நாடகாவில் மழை - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தமிழக கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கேரளா மற்றும் தமிழக-கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் குறித்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் பகுதிக்கு நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து வினாடிக்கு ஆயிரம் கன அடியிலிருந்து 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் 62 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று 108 கன அடியாகவும் இன்று வினாடிக்கு 178 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, இந்த தண்ணீரானது இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தொடங்கிய போதும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் இருந்து ஜீன் 12ல் தண்ணீர் திறப்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும் ஜூலை மாதத்தில் சம்பா தாளடி போன்ற இரண்டு போக விவசாயத்திற்காக தண்ணீர் திறப்பதற்கு தற்பொழுதுள்ள சூழ்நிலை சாதகமாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.40 அடியாகவும் நீர் இருப்பு 15.62 டிஎம்சியாகவும் உள்ளது, நீர்வரத்து வினாடிக்கு 178 கனஅடியாக அணைக்கு வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.