சார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..!
தருமபுரி மாவட்டம் அரூர் நகரில் அரசு அலுவலகங்களுக்கு சொந்தமான கட்டடங்கள், பள்ளிகள் போன்றவற்றில் தீட்டப்பட்ட வண்ண ஓவியங்கள் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
தருமபுரி மாவட்டம் அரூர் நகரில் அரசு அலுவலகங்களுக்கு சொந்தமான கட்டடங்கள், பள்ளிகள் விளையாட்டு மைதானம் போன்றவை மக்கள் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர்களில் சினிமா போஸ்டர்கள், கட்சி விளம்பரங்கள் போன்றவை ஒட்டப்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த சுவர்கள் அசுத்தமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த சுவர்களை சுத்தப்படுத்தும் நோக்கிலும், அந்த சுவர்களில் அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அரூர் கோட்டத்தின் புதிய சார் ஆட்சியராக பொறுப்பேற்ற ஐஏஎஸ் அதிகாரி வண்ண ஓவியங்களை வரைய திட்டமிட்டுள்ளார். மேலும் இதற்கு பொதுமக்களின் பங்களிப்பை நாடிய அவர் முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்
இதனை பார்த்த தன்னார்வலர்கள், பொதுமக்கள், அழகு அரூர் காப்போம் அறக்கட்டளை சார்ந்த நபர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்துள்ளனர். ஓவியங்களை வரைய தேவையான பெயிண்ட் மற்றும் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கப்பட்டது. மேலும் வண்ண ஓவியங்களை தீட்டுவதற்கு, தருமபுரி மாவட்ட ஓவியர்கள் சங்கத்தினர் பணம் பெறாமல், தானாக முன்வந்து ஓவியங்களை வரைந்து தருவதாக ஒப்புதல் தெரிவித்தனர்.
இதனையடுத்து கடந்த வார ஞாயிற்றுக்கிழமை முதற்கட்டமாக, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி சுற்றுச் சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணியானது தொடங்கியது. இதில் இந்திய தேசியக்கொடி, தமிழக கோபுரச் சின்னம், குழந்தை திருமணம் உதவி மைய தொடர்பு எண், வாக்களிப்பது ஜனநாயக கடமை, சுகாதாரம், யோகா, நாட்டின் நினைவு சின்னங்கள் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டன. இதனையடுத்து இந்த ஓவிங்களை பார்க்கும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அவற்றைக் கண்டு ரசிப்பதோடு மட்டுமல்லாமல் புகைப்படும் எடுத்து மகிழ்கின்றனர்.
இது குறித்து அந்த ஓவிங்களை வரைந்த ஓவியர்கள் கூறியதாவது “ டிஜிட்டல் மோகத்தால், ஓவியர்களின் வருவாய் மற்றும் வாழ்க்கை நலிவடைந்து வருகிறது.அதனால் அரசின் திட்டங்கள் மற்றும் விளம்பரங்களை விளம்பரப்படுத்த பிளக்ஸ், பேனர்கள் போன்றவற்றை அணுகாமல் அதனை வரையும் பணியை ஓவியர்களுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் எங்களது வாழ்க்கையும் செழிக்கும், கலையும் அழியாமல் பாதுகாக்கப்படும்”என்றனர்.