நம்பிக்கை வாக்கெடுப்பு... கேள்விகளும் பதில்களும்
தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.
1. நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன?
ஓர் ஆட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா என்ற சந்தேகம் எழும்போது, அதனை நிரூபிப்பதற்கும், தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கும் அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் வாய்ப்பே நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நடைமுறை.
2. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஓர் அரசை யார் கோர முடியும்?
ஓர் அரசு பெரும்பான்மை ஆதரவின்றி சட்டப்பேரவையின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதப்படும் நிலையில், அந்த அரசை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனது பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிடுவார். குறிப்பிட்ட ஒரு பிரச்னையில் ஆளும் அரசு நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதினால், அதன் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரலாம். அதை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் சபாநாயகருக்கு உரிமை உண்டு.
3. நம்பிக்கை வாக்கெடுப்பில் யாரெல்லாம் பங்கேற்க முடியும்?
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம்.
4.நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதை உறுப்பினர்கள் தவிர்க்க முடியுமா?
சுயேச்சை உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்களாம். அரசியல் கட்சிகள், அக்கட்சியின் கொறடா உத்தரவின்படி வாக்களிப்பார்கள்.
5. நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்?
அனைத்து உறுப்பினர்களும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர், பேரவையின் கதவுகள் மூடப்படும். சட்டப்பேரவைச் செயலாளர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நடைமுறைகளைத் தொடங்குவார். 234 உறுப்பினர்களும் ஆறு பிரிவாக அமர வைக்கப்பட்டிருப்பர். ஒவ்வொரு பிரிவினரையும் அரசை ஆதரிப்பவர்களை முதலில் எழுந்து நிற்கச் சொல்வார்கள். அடுத்ததாக எதிர்ப்பவர்களை எழுந்து நிற்கச் சொல்வார்கள். அடுத்தபடியாக நடுநிலை வகிப்பவர்களை எழுந்து நிற்கச் சொல்வார்கள்.
ஒவ்வொரு பிரிவினரும் தங்களது நிலைப்பாட்டை எழுந்து நின்று தெரிவிப்பார்கள்.எழுந்து நின்று தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிப்பவர்களின் பெயர்களை குறித்து வைத்து, வாக்குகளாக எண்ணப்படும். ஆறு பிரிவினரும் முடித்த பின், அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையிலும் வாக்குகளை எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.
6. சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதா?
தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியது ஒரு வாக்கு வித்தியாசமாக இருக்கும் பட்சத்தில் சபாநாயகர் ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்கலாம்.
7. வெற்றி, தோல்வி முடிவுகளை யார் அறிவிப்பார்கள்?
சபாநாயகரே அறிவிப்பார். விவரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும்.