'எங்களை பாதுகாக்க அரசா அல்லது NLC-ஐ பாதுகாக்க அரசா?' - போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்

'எங்களை பாதுகாக்க அரசா அல்லது NLC-ஐ பாதுகாக்க அரசா?' - போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்
'எங்களை பாதுகாக்க அரசா அல்லது NLC-ஐ பாதுகாக்க அரசா?' - போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்

“ஏழு தலைமுறையாக பாதுகாத்த நிலத்தை எதற்கு நாங்கள் என்எல்சிக்கு தர வேண்டும்?” என கேள்வியெழுப்புகின்றனர் வானதிராயபுரம் கிராம மக்கள். என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக நிலங்களை கையகப்படுத்தப்படும் பணியை கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கு அப்பகுதியையொட்டிய பல்வேறு கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள்.

நேற்றைய தினம் குடியரசு தினத்தை புறக்கணித்து, அதை கருப்பு நாளாக கடலூரில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணி நடக்கும் பகுதியை ஒட்டியுள்ள பல கிராம மக்கள் அனுசரித்தனர். இதில் என்.எல்.சி சுரங்கத்தின்மீது, அங்குள்ள வானதி ராயபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் நம்மிடையே அதுபற்றி தெரிவிக்கையில், “உலக நாடுகள் அனைத்தும், திறந்தவெளி சுரங்கத்தை மூட கூறுகிறது. இதற்கு மத்திய அரசும் செவி சாய்த்தது. ஆனால் தற்போது எங்கள் நிலங்களை விட்டு வெளியேறுமாறு எங்களை மிரட்டுறார்கள். இதை எப்படி புரிந்துக்கொள்வது?

ஏழு தலைமுறைகளாக எங்கள் பாட்டன், பூட்டன் காப்பாற்றி வைத்திருந்த விவசாய நிலத்தை தற்போது இவர்கள் அற்பத்தொகை கொடுத்து எங்களை வெளியேற கூறுகிறார்கள். எங்களுக்கு நிரந்தர வேலையும் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம். இங்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 கோடி ரூபாய் விலை போகும். ஆனால் பத்திரப்பதிவு நிறுத்தி வைத்ததால் யாரும் வாங்க முன்வரவில்லை. பத்திரப்பதிவை நிறுத்தி வைத்துள்ள என்எல்சி, எங்கள் நிலங்களை அற்ப தொகைக்கு கேட்கிறார்கள். இதனை ஒருபோதும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். பாரம்பரியமாக பல தலைமுறையாக குடும்பம் குடும்பமாக வாழ்ந்த நாங்கள், தற்போது அனாதைகளாக வெளியேற்றப்பட்டு வருகிறோம்.

இதற்கு தமிழ்நாடு அரசும் கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஒத்துப் போகிறது. எங்களைப் பாதுகாக்க அரசு செயல்படுகிறதா அல்லது என்எல்சி-ஐ பாதுகாக்க அரசு செயல்படுகிறதா?” என கடும் குற்றச்சாட்டுகளை வைத்தனர். இவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக இருப்பது, “பல நாடுகளில் திறந்தவெளி சுரங்கம் மூடப்படுகிறது. ஆனால் இங்கு ஏன் இது செயல்படுகிறது? எங்களுக்கு இந்த நிறுவனமே வேண்டாம். தமிழர்களுக்கு தமிழன் நலனுக்காக தொடங்கப்பட்ட நிறுவனம் இன்று தமிழர்களுக்கு துரோகம் செய்யும் நிறுவனமாக மாறிவிட்டது” என்பதாகும்.

இதற்கிடையே என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்கள் 11,110 பேர் பணியாற்றி வருவதாகவும், இதில் 2023 தொடங்கி 2026க்குள் 4,036 பேர் பணி ஓய்வு பெறப்போவதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த கண்ணபிரான் என்பவர் தகவல் பெற்றுள்ளார். இந்த தகவலை தொடர்ந்து, ஓய்வு பெறும் பணியாளர்களின் காலி பணியிடங்கள் தமிழர்களுக்கு ஒதுக்கப்படுமா அல்லது வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com