தனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..! தந்தையாகவே கொண்டாடும் ஊர்மக்கள்..!

தனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..! தந்தையாகவே கொண்டாடும் ஊர்மக்கள்..!
தனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..! தந்தையாகவே கொண்டாடும் ஊர்மக்கள்..!

என் கடமை பணி செய்து கிடப்பதே என்பதற்கிணங்க வாழ்ந்துவரும் சுப்பிரமணி வாத்தியார், ஒரு கிராமத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். யார் இவர்? இவ்வாறு அழைக்கப்பட காரணம் என்ன? 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட கிதிரிபேட்டை என்னும் கிராமம் அடிப்படை வசதிகளைப் பொருத்தமட்டில் சுற்றுவட்டார கிராமங்களைவிட பல மடங்கு முன்னேறி உள்ளது. தன்னிறைவு பெற்ற கிராமமாக கிதிரிபேட்டை திகழ்வதற்குக் காரணம், சுப்பிரமணி வாத்தியார். காஞ்சிபுரத்திலுள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், நல்லாசிரியர் விருதும் பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு சுப்பிரமணி, கிராமத்தின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளார். கிதிரிபேட்டை கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை, தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவாக கொடுத்து, பெற்றுத் தந்துள்ளார்.

கடந்த 32 ஆண்டுகளாக கிதிரிபேட்டையில் உள்ள வீட்டில் வசித்துவரும் சுப்பிரமணி, தனது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு ஒவ்வொரு முறையும் சென்னைக்கு மனுவோடு புறப்பட்டுச் செல்கிறார். இவரது அயராத முயற்சியால் அந்தக் கிராமத்திற்கு குடிநீர் குழாய், அங்கன்வாடி மற்றும் பள்ளிக் கட்டடம், சமுதாயக் கூடம், நீர்த்தேக்க தொட்டிகள், தரமான சாலைகள், கால்நடை மருந்தகம், நூலகம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கிடைத்துள்ளன.

இது குறித்து சுப்பிரமணி வாத்தியார், “சமுதாய பணி என்பது அற்புதமான பணி. இதில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட கூடாது. தொய்வு ஏற்படாமல் வேலை செய்தால்தான் அதிகாரிகளிடமிருந்து மக்களுக்கு தேவையான விஷயங்களை வாங்கி செய்ய முடியும். பல ஐஏஎஸ் அதிகாரிகள் உதவி இருக்கிறார்கள். சில திட்டங்கள் தாமதமாகும், ஆனால் நிச்சயம் எப்படியாவது போராடி வர வைத்து விடுவேன். ஆசிரியர் பணியில் இருந்த போதிலிருந்தே சமுதாய பணிகளை செய்து வருகிறேன். நான் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து இன்றுவரை தனிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறேன்” என்கிறார். 

தனக்கு வரும் ஓய்வூதியத் தொகையில் உணவு செலவு போக மற்ற அனைத்தையும், அதிகாரிகளைச் சந்திக்க சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணம் செய்யவும், மனுக்களை பதிவுத் தபாலில் அனுப்புவதற்கும் செலவு செய்கிறார் சுப்பிரமணி. இதனால் ஊர் மக்களிடையே அவர் மீதான மதிப்பு உயர்ந்துள்ளது. 

இந்த ஊராட்சியை அனைத்து வசதிகளும் கொண்ட ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்பதே தனது லட்சியம் எனக்கூறுகிறார் சுப்பிரமணி. எந்தக் கோரிக்கையானாலும் போராடியாவது பெற்றுத்தந்துவிடுவார் என அவரை கொண்டாடுகின்றனர் இந்தக் கிதிரிபேட்டை கிராம மக்கள். தனி மனிதராக இருந்து கிராமத்திற்கு மட்டுமில்லாது சுற்றுவட்டாரங்களிலுள்ள பள்ளிகளுக்கும் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கும் சுப்பிரமணியை கிதிரிபேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்‌கள் தந்தையாகவே பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com