உறவினர்கள் ஏற்றுக்கொள்ளாததால் காதல் தம்பதி எடுத்த விபரீத முடிவு... மயிலாடுதுறையில் சோகம்!
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே காதல் கணவன், மனைவி தனித்தனியாக தூக்கிட்டு இறந்த சம்பவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், கடுவேலி செங்கமேட்டு தோப்பில் பைக், செல்போன், பேக் ஆகியவை கீழே கிடந்த நிலையில் ஒரு ஆணும், பெண்ணும் தனித்தனியே தூக்கிட்டு இறந்துள்ளனர். இதுகுறித்து திருச்சம்பள்ளி விஏஓ மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் கும்பகோணம் பட்டீஸ்வரம் சோழன்மாளிகையை சேர்ந்த பெரியசாமி (30) என்பதும், இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு செம்பனார்கோவில் வல்லம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு மாமனார்வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் மாமனார் வீட்டுக்கு எதிரே இருந்த துரைராஜ் மகள் துர்காதேவி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. துர்காதேவி மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பெரியசாமி, துர்காதேவியை அழைத்துச்சென்று திருமணம் செய்து கொண்டு கடந்த 2 வருடங்களாக ஈரோடு சத்தியமங்கலத்தில் வசித்து வந்ததுள்ளனர்.
தங்களை உறவினர்கள் ஏற்காததால் மனவேதனையில் இருந்த பெரியசாமி, துர்காதேவி இருவரும் கடந்த சில தினங்களாக வேளாங்கண்ணி மற்றும் பல்வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் காலை வல்லத்திற்கு வந்துள்ளனர். பின்னர் இருவரும் கடுவேலி செங்கமேட்டு தோப்பில் தூக்கிட்டு இறந்ததும் தெரியவந்தது.
பெரியசாமி, துர்காதேவியை உறவினர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளாததால் மனவேதனையில் தூக்கிட்டு இறந்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஒரே பைக்கில் ஈரோட்டிலிருந்து பல்வேறு ஊர்களை சுற்றி வேளாங்கண்ணி சென்று விட்டு பின்னர் தற்கொலை செய்துகொண்ட இடத்திற்கு வந்துள்ளனர்.
அங்கே கிடந்த பையில் ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அதில் 'நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது எங்களது உறவினருக்கு பிடிக்கவில்லை. யாரும் மதிப்பதில்லை. எங்களை பார்க்க யாரும் வருவதில்லை. இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளானோம். நாங்கள் யாரிடமும் கடன் வாங்கவில்லை. ஈரோட்டில் சீட்டுப் போட்டு வைத்துள்ளோம். வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வீட்டில் வைத்திருக்கிறோம் அதை எடுத்துக் கொள்ளவும். எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. எங்களது உறவை உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் இந்த முடிவு எடுத்துள்ளோம்" என்று அதில் எழுதப்பட்டிருந்தது.