குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு சாகடித்த சோகம்
பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலைய குப்பைத் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு தினசரி சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இன்று இரவு காரைக்குடி பேருந்து நிறுத்தம் அருகே திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைத் தொட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்தக் குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் குப்பைத் தொட்டியை எட்டிப் பார்த்த போது பிறந்து சில மணி நேரம் ஆன ஆண் குழந்தை இருப்பதை கண்டு காவல்நிலைத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குப்பைத் தொட்டியில் இருந்த ஆண் சிசுவை பார்த்த போது அழுகுரல் இல்லமால் இறந்த நிலையில் இருந்துள்ளது. அந்த ஆண் சிசுவைக் கைப்பற்றிய போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால் தூக்கி ஏறியப்பட்டதா? அல்லது பேருந்து நிலையத்திற்கு வந்தவர்கள் சிசுவை குப்பைத் தொட்டியில் வீசி சென்றனரா என நகர் வடக்கு காவல்நிலைய போலீசார் விசாராணை செய்து வருகின்றனர்.