தக்காளி விலை விர்ர்ர்ர்ர்ர்ர்.... - ஒரு கிலோ 50 ரூபாய்
தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சி, விளைச்சல் இல்லாமை மற்றும் வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி, மொரப்பூர், பொம்மிடி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல், கரும்பு, உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதுடன், பெரும்பாலான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இருப்பினும் பாலக்கோடு பகுதியில் அதிகளவு தக்காளி பயிரிடப்படுவதால், அங்கு மிகப்பெரிய தக்காளி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதாலும் ஓடைகளில் தண்ணீர் இல்லாததாலும், பாலக்கோடு உள்ளிட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 22 ஆயிரம் ஹெக்டேர் தக்காளி சாகுபடி விவசாயம் முழுமையாக காய்ந்து வருகிறது. மேலும் பல ஏக்கர் தக்காளி பழம் பழுத்து அறுவடை செய்யும் நிலையில், தண்ணீரின்றி காய்ந்து கருகி வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். மேலும் தக்காளி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தக்காளி விற்பனை மற்றும் வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிலோ ரூ.45 முதல் 50 வரை விற்பனையாகிறது. இதனால் விலை உயரும் போது மகசூல் இல்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக தண்ணீரை விலை கொடுத்து வாங்கி ஊற்றியும் தக்காளியை காப்பாற்ற முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.