சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு.
Read Also -> “திருவாரூர் தொகுதி வேட்பாளர் நானா?” ஸ்டாலின் சூசகம்
2019-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று காலை 10 மணியளவில் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. இதில் தமிழில் பேசிய ஆளுநர், அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எனக் கூறி, புத்தாண்டு செய்தியாக எளிமையான வாழ்க்கையை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும் என்றார். பின்னர் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின் ஆளுநர் உரையை புறக்கணித்து பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது. இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் புரோஹித் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டன் இன்று நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இம்மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு தமிழக வாணுர்தி மற்றும் பாதுகாப்புதொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது. இது தவிர மேகதாது, ஸ்டெர்லைட்,கஜா நிவாரணம் போன்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2019 ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம், ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.