திருட வந்து மீன் குழம்பு சாப்பிட்டுவிட்டுத் தூங்கிய திருடன் - மடக்கிப் பிடித்த மக்கள்

திருட வந்து மீன் குழம்பு சாப்பிட்டுவிட்டுத் தூங்கிய திருடன் - மடக்கிப் பிடித்த மக்கள்

திருட வந்து மீன் குழம்பு சாப்பிட்டுவிட்டுத் தூங்கிய திருடன் - மடக்கிப் பிடித்த மக்கள்
Published on

தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட திருடன் ஒருவன் தனது குறட்டையால் பிடிபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மர்ம நபர் ஒருவர் வீடுகளின் பூட்டை உடைத்து பொருட்களைக் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து ஊர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வந்த தக்கலை காவல்துறையினர் சம்பவ இடங்களுக்குச் சென்று வீடுகளிலிருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்தனர்.

இந்தக் காட்சிகளில் மர்ம நபர் ஒருவர் வீடுகளின் சுவர் மீது ஏறிக் குதித்து ஒவ்வொரு வீடாகச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதன் விசாரணை ஒருபுறம் சென்று கொண்டிருக்க, நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடி ஒன்றில் மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்ததாகக் கூறி மக்கள் ஒருவரைப் பிடித்துத் தக்கலைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சிசிடிவி காட்சிகளிலிருந்த மர்ம நபரும், மக்கள் பிடித்து வந்த நபரும் ஒரே நபர் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வீடுகளில் கொள்ளையடித்த நபர் கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சதீஷ் என்பதும் தற்போது கொரோனா ஊரடங்கால் கேரளாவில் கொள்ளையடிக்க முடியாத நிலையில் குமரி மாவட்டத்தைக் குறி வைத்துக் கொள்ளையடிக்க வந்ததும் தெரிய வந்தது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியதாவது “ முதலில் பகல் நேரத்தில் பூட்டி கிடந்த இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் அங்கு நகையோ பணமோ கிடைக்காத நிலையில் அப்பகுதியிலேயே பதுங்கியிருந்தேன். அதன் பின்னர் மீண்டும் ஒரு வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டேன். அப்போது என்னைப் பார்த்த மக்கள் சத்தம் போடவே, அவர்களிடம் நான் ஒரு கொரோனா நோயாளி எனக் கூறி தப்பிச் சென்றேன்.

அதன் பின்னரும் அப்பகுதியிலேயே பதுங்கியிருந்த நான் இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள சங்கர் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே இறங்கினேன். ஆனால் அங்கும் எதுவும் கிடைக்க வில்லை. ஆனால் அவரது வீட்டில் சமைத்து வைத்திருந்த மீன் குழம்பும் சாப்பாடும் இருந்தது. அதனை எடுத்துக் கொண்ட மொட்டை மாடிக்குச் சென்று, நன்றாகச் சாப்பிட்டு விட்டு, உறங்கிவிட்டேன். விடிவதற்குள் எழுந்து சென்று விட வேண்டும் என்று நினைத்த நான் குறட்டை விட்டு நன்றாகத் தூங்கி விட்டேன். எனது குறட்டைச் சத்தம் கேட்டு என்னை மக்கள் பிடித்து விட்டனர்”என்று கூறினார்.

இதனையடுத்து சங்கர் மற்றும் பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தக்கலை காவல்துறையினர் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com