”இப்படி மாட்டிகிட்டியே பங்கு..!” திருட சென்ற இடத்தில் கையும் களவுமாக சிக்கி கொண்ட திருடன்!
சென்னையில் வீடு ஒன்றில் திருட சென்ற திருடன், போலீஸார் வருவதை கண்டதும், கட்டிலுக்குள் பதுங்கியநிலையில், பின் போலீஸாரிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை ஜே.ஜே.நகரில் இருந்த வீடு ஒன்றின் உரிமையாளர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றிருந்தநிலையில், அந்த வீடு வெகுநாட்களாக பூட்டியநிலையில் கிடந்துள்ளது. இதனை வெகு நாட்களாக நோட்டமிட்டிருந்த திருடன் இன்று (7.4.2025) காலையில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்.
சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக, அப்பகுதி போலீஸாருக்கும் , தீயணைப்பு துறை வீரர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட திருடன்.. மடமடவென்று, வீட்டை உள்பக்கமாக பூட்டி கொண்டு, கட்டிலின் அடியில் பதுங்கியுள்ளார்.
இப்படி திருடன் போக்கு காட்டிய நிலையில், தீயணைப்பு துறையினர் கிரில் கேட்டை உடைத்து, உள்ளே சென்று கையும் களவுமாக திருடனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட திருடன் பாலமுருகன் என்பதும், அவர்மீது 10க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடிய நகைகளுடன் கையும் களவுமாக பிடிப்பட்ட திருடனை ஜே. ஜே நகர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.