”ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை” - கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் புதிய கோரிக்கை!

”ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை” - கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் புதிய கோரிக்கை!
”ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை” - கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் புதிய கோரிக்கை!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண தொடர்பாக  உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என தமிழக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மறு உடற் கூறாய்வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது விசாரணை முடியும் நிலையில் இருப்பதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவி மரணமடைந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் வி.பி.செல்வி சார்பில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க கோரி தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மனு அளித்ததாக கூறியுள்ளார்.

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் எனவே ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாணவியின் தாய் தரப்பில் மகளின் மரணத்தை தொடர்ந்து பதிவான வழக்கின் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், அதில் முழு திருப்தி இல்லாததால் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை. வைக்கப்பட்டது.

காவல் துறை தரப்பில், சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சிபிசிஐடி விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் மனுத்தாக்கல் செய்திருந்தார் எனவும், அந்த மனு நிலுவையில் இருப்பதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது. மேலும், மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வு அறிக்கையை பெற்ற பின், இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு இந்நீதிமன்றம் நான்கு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாணவியின் தாய் தாக்கல் செய்த மனுவை, ஏற்கனவே நிலுவையில் உள்ள தந்தையின் மனுவுடன் சேர்த்து மார்ச் 8ம் தேதி பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com