நகைக்கடன் தள்ளுபடிக்கு அரசாணை வெளியீடு-யார் யாருக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்? முழுவிவரம்

நகைக்கடன் தள்ளுபடிக்கு அரசாணை வெளியீடு-யார் யாருக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்? முழுவிவரம்

நகைக்கடன் தள்ளுபடிக்கு அரசாணை வெளியீடு-யார் யாருக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்? முழுவிவரம்
Published on
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு ரூ.6,000 கோடி நகைக் கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:- ''மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 13.09.2021 அன்று சட்டமன்றப் பேரவை விதி எண் .110-இன் கீழ், " நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும். தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் எனத் தெரிய வருகிறது. இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளைச் செய்யும்" என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், முதலமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்த ஏதுவாக, கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி ஒரு குடும்பத்தினர் 31-03-2021-ஆம் நாள் வரை 5 பவுனுக்கு உட்பட்டு (மொத்த எடை 40 கிராம் வரை) தங்க நகைகளை அடமானம் வைத்து நகைக் கடன் பெற்றதில் ஒரு சில கடன்தாரர்கள் தங்களது கடன் தொகையை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செலுத்தியது நீங்கலாக, 31-03-2021-ஆம் நாள் வரை நிலுவையில் இருந்த தொகை ரூ .17,114.64 கோடி என்றும், அதற்குப் பிறகு 01.04.2021 முதல் 30.09.2021 வரை பொது நகைக் கடன்களை பகுதியாகவோ அல்லது முழுவதுமாக திரும்பச் செலுத்தியது மற்றும் தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னர் அசல், வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் உள்ளிட்டு நிலுவையாக ரூ .6,000 கோடி (தோராயமாக) உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கருத்துருவின் அடிப்படையில், கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி ஒரு குடும்பத்தில் 31-03-2021-ஆம் நாள் வரை 5 பவுனுக்கு உட்பட்டு (மொத்த எடை 40 கிராமுக்கு உட்பட்டு) பொது நகைக் கடன் பெற்று அதில் சில கடன்தாரர்கள் நாளது தேதிவரை தங்களது நிலுவைத் தொகையினை பகுதியாக செலுத்தியது நீங்கலாகவும், தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னரும் இந்த அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை நிலுவையில் உள்ள ரூ .6,000 கோடி (தோராயமாக) நகைக் கடன்களை இந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் அறிவுரை வழங்கும்படி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
மேற்குறிப்பிட்ட நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான பட்டியலில் கண்டுள்ள நகைக்கடன்களை, அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும், அப்பட்டமான நகைக் கடன் மோசடியில் ஈடுபட்ட அனைத்து நபர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படுவதன் மூலமாக தமிழ்நாட்டில் சுமார் 16 இலட்சம் நகைக் கடன்தாரர்கள் பயன் பெறுவார்கள். கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக் கடன்கள் அனைத்தும் சங்கத்தின் சொந்த நிதியிலிருந்து, அதாவது, பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட வைப்பு தொகையிலிருந்து வழங்கப்பட்டுள்ளதால், மேற்குறிப்பிட்ட தள்ளுபடியில் உள்ள அசல் தொகை மற்றும் 01.04.2021-ஆம் நாள் முதல் இவ்வரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை அதற்குரிய வட்டியினை அரசு ஏற்றுக் கொண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு தள்ளுபடித் தொகையினை அரசு வழங்கும்.
இவ்வரசாணையின் இணைப்பில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தேவைக்கேற்ப கூடுதலாக நெறிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது. மேற்கண்டவாறு தள்ளுபடி செய்யப்பட்ட பொது நகைக் கடன் தொகையினை அளவீடு (Quantification) மற்றும் செலவீடு (Reimbursement) செய்து உரிய குறிப்பான ஆணைகள் வெளியிட ஏதுவாக, உரிய கருத்துருவினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களின் சங்கங்களின் பதிவாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com