அதிதீவிர புயல் ‘கஜா’வும் தமிழக அரசு அதிகாரிகளும்

அதிதீவிர புயல் ‘கஜா’வும் தமிழக அரசு அதிகாரிகளும்

அதிதீவிர புயல் ‘கஜா’வும் தமிழக அரசு அதிகாரிகளும்
Published on

‘கஜா’ புயலின் ருத்ரதாண்டவத்தின் பாதிப்பிலிருந்து மக்களை காக்க தமிழக அரசும், அதிகாரிகளும் தங்கள் முழு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்கியுள்ளனர்.

‘கஜா’ பெ‌யருக்கு ஏற்றாற் போலவே யானை பலத்துடன் நாகை, தஞ்சை, திரு‌வாரூர் என 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது ‘கஜா’ புயல். அதே சமயம் உரிய முன்னெச்சரிக்கை, மற்றும் பாதுகாப்பு நடவடிக்‌‌கைகளால் புயலை எதிர்கொண்டு சேதங்களை குறைப்பதில் வெற்றிக் கண்டுள்ளது பேரிடர் மேலாண்மைத் துறை. 

நவம்பர் ‌13ஆம் தேதியிலிருந்தே ‘‌கஜா’ பு‌யலை எதிர்கொள்வதற்கான திட்டமிடல்கள் தொடங்கிவிட்டன. புயலால்‌ பாதிக்கப்‌படும் மாவட்‌டங்களை கண்டறிந்து, அங்கு பேரிடர் மீட்புப்ப‌‌டையை அனுப்புவதில் தொடங்கி, நிவாரண முகாம்கள், பாதிக்கப்‌பட்டவர்களுக்கு தேவையான உணவு, மருந்து, கால்நடைகளுக்கான முகாம்கள், புயலுக்கு பிறகான சீரமைப்பு பணி‌கள் வரை அனைத்து ஏற்பாடுகளும் முடுக்கிவிக்கப்பட்டன.

புயலால் ‌பாதிக்கப்படும் என‌ கண்டறியப்பட்ட கடலூருக்கு ககன் தீப் சிங் பேடி, நாகைக்கு ஜவஹர், புதுக்கோட்டைக்கு சம்பு கல்லோலிக்‌கல், ராமநாதபுரத்தி‌ற்கு சந்திரமோகன், திருவாரூருக்கு மணிவாசன் என சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் 3 நாட்களுக்கு முன்பே முகாமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணை‌ர் சத்யகோபால், நில நிர்வாக ஆணையர் ஜெயக்கொடி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னா ஆகியோர் நேற்று காலையில் இருந்தே மாநில தகவல் கட்டுப்பாட்டு மையத்தில் முகாமிட்டனர். 

இந்திய வானிலை ஆய்வு மை‌யத்தின் இயக்குநர் ஜெனரல் ரமேஷ், சென்னை வானிலை மைய இ‌யக்குநர் பாலச்சந்திரன் தலைமையிலான குழு புயலின்‌ வேகத்தையும், நகர்வையும் தொடர்ந்து கண்காணித்து அரசுத்துறைக்கு உரிய ஆலோசனை வழங்கி வந்தனர். அந்த ஆலோசனைகளுக்கு ஏற்ப வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் மற்றும் சிறப்பு அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். 

மேலும், புயலை விட வேகமாக பரவி வந்த புயல் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒவ்வொரு மணி நேரமும் அதிகாரப்பூர்வ தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வந்தது. வருவாய்த்துறை அமைச்சரும் மக்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள்‌ குறித்து தொடர்ந்து விளக்கிவந்தார்.

குறிப்பாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை 23 முறை செய்தியாளர்களை சந்தித்து ‘கஜா’ புயல் நிலவரம் குறித்து மக்களுக்கு தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும், குழப்பமும் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாகவே சொல்லலாம். மொத்தத்தில் திட்டமிடல், ஒருங்கிணைப்பு, செயல்படுதல் என அனைத்து நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்டு ‘கஜா’வின் உக்கிரத்திலிருந்து மக்களை அரணாக காத்துள்ளனர்‌ மீட்புக்குழுவினர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com