முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது
2019-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் கூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றவுள்ள உரை இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த உரைக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அமைச்சரவை இன்று கூடவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அடுத்த மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இது தவிர மேகதாது, ஸ்டெர்லைட் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
15-வது சட்டப்பேரவையின் 2018ம் ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி 8-ம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.