குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுடன் சென்ற அரசுப்பேருந்து 25 அடி பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலும், மழை பெய்ததுடன், மேகமூட்டமும் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், மதுரையிலிருந்து உதகைக்கு 25 பயணிகளுடன் அரசுப்பேருந்து ஒன்று இன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி ஒன்றுக்கு வழிவிட முயன்று ஓட்டுநர் அரசுப்பேருந்தை சாலையோரத்தில் ஒதுக்கியுள்ளார். அச்சமயம், மண்சரிவு ஏற்பட்டு பேருந்து 25 அடி பள்ளத்தில் இறங்கியது.
நல்வாய்ப்பாக, அந்த பகுதியில் அதிக மரங்கள் இருந்ததால், பேருந்து பள்ளத்தில் விழாமல் தப்பியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மற்றொரு பேருந்து மூலம் உதகைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து மீட்பு உபகரணங்கள் கொண்டுவரப்பட்டு அரசுப்பேருந்து பள்ளத்திலிருந்து மீட்கப்பட்டது.