13 பிள்ளைகள் இருந்தும் பிச்சை எடுத்த மூதாட்டி: கலெக்டரிடம் கண்ணீர் மனு!
பதிமூன்று பிள்ளைகளும் அவர்களது வாரிசுகளும் கைவிட்ட நிலையில், தான் சாகும்வரை பாதுகாத்து உணவளிக்க, 95 வயது மூதாட்டி ஒருவர் வேலூர் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர், 95 வயதான மூதாட்டி அந்தோனி அம்மாள். இவரது கணவர் தேவராஜ். கணவரின் கொடுமை தாங்க முடியாமல் வேலூர் மாவட்டம் காட்பாடியில் கட்டிகொடுக்கப்பட்ட மகள் ஜெய்சிராணி வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார். அங்கு மகள் கவனிக்காத நிலையில் மருமகன் நந்தகுமார் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்த பிறகு மகள் ஜெய்சிராணியால் கைவிடப்பட்ட அந்தோனியம்மாள், கடந்த 5 ஆண்டுகளாக வேலூர் விண்ணரசி மாதா கோயிலில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். பிச்சை எடுக்கும் பணத்தையும் தனது மகள் வாங்கி சென்றதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் மயக்கம் வந்து தவறி விழுந்ததில் வலதுகாலில் எழும்பு முறிவு ஏற்ப்பட்டு அவதிப்பட்டு வந்தவரை அங்கிருந்த ஒரு பெண் பாதுகாத்து வந்துள்ளார். இதை தொடர்ந்து அந்தோனியாம்மாளை சமூக ஆர்வலர் மணிமாறன் என்பவர் அழைத்து வந்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் மனு அளித்துள்ளார். அதில் அந்தோனியம்மாளுக்கு உணவு, தங்க இடம் வழங்க வேண்டும். இவரை கைவிட்ட உறவுகள் மீது முதியோர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அந்தோனியம்மாள் கூறும் போது, எனக்கு 13 பிள்ளைகளும் பேரன்களும் இருந்தும் அனாதையாக உள்ளேன். எனது கணவர் கேரளாவில் உள்ள அவரது தம்பி வீட்டில் உள்ளார். நான் மட்டும் இப்படி கஷ்டத்தை அனுபவித்து வருகிறேன். எனக்கு அந்த ஆண்டவர் மட்டுமே துணை என்றும் நான் இறக்கும் வரை என்னை பாதுகாத்து எனக்கு உணவு வழங்கினால் போதும். கால் உடைந்திருப்பதால் என்னால் நடக்கக் கூடிய முடியவில்லை என்றும் கண்ணீர் மல்கக் கூறினார். மேலும் நான் இறந்தாலும் என்னை எனது உறவுகள் யாரும் பார்க்கக் கூடாது என்றும் கூறினார்.
சமூக ஆர்வலர் மணிமாறன் கூறும் போது, 95 வயதான் மூதாட்டி நிலை குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததும் அவரை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து வந்து மனு கொடுத்துள்ளோம். மூதாட்டியை கைவிட்ட அவரது வாரிசுகள் மீது முதியோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் அவருக்கான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். மேலும் இவரின் நிலை குறித்து உறவினர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய போது சரியான பதில் அளிக்காமல், ’இறந்த பிறகு சொல்லுங்கள். வருகிறோம்’ என கூறினர். இதனால் நாங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்தோனியம்மாள் இறந்துவிட்டதாக தகவல் கொடுத்தோம். நேரில் வந்த உறவினர்கள், இவர் உயிரோடு இருப்பதை பார்த்து எங்களைத் திட்டு விட்டுச் சென்றனர் என்றும் கூறினார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் மாவட்ட சமுக நலத்துறை சார்பில் தொண்டு நிறுவன முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும் அவரின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.