தமிழ்நாடு
தமிழக ஆளுநராகும் உளவுத்துறை நிபுணர்: ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
தமிழக ஆளுநராகும் உளவுத்துறை நிபுணர்: ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
ஆர்.என்.ரவியை தமிழகத்தின் ஆளுநராக மத்திய அரசு தேர்வு செய்திருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
தமிழக ஆளுநராக இருந்தவர்களில் மிகச்சிலர் மட்டுமே அரசியல் பின்னணி இல்லாதவர்கள். அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் ஆர்.என்.ரவி. காவல் துறையை பின்னணியாக கொண்ட பிரமுகர் தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவது இது 2ஆவது முறை. கடந்த 2002ஆம் ஆண்டில் ஆந்திர முன்னாள் டிஜிபி ராமமோகன் ராவ் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இணக்கமான போக்கை கடைபிடித்த ராமமோகன் ராவ் 2 ஆண்டுகளிலேயே வட கிழக்கு மாநிலம் ஒன்றின் ஆளுநராக மாற்றப்பட்டார். ஆனால் அந்த இட மாற்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு. எனினும் அக்கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்காத நிலையில் ஆளுநர் பதவியிலிருந்தே ராஜினாமா செய்தார் ராமமோகன ராவ்.
இந்நிலையில் ராமமோகன் ராவுக்கு பின் 17 ஆண்டுகள் கழித்து மற்றொரு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை ஏற்கிறார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று 4 மாதங்களில் புதிய ஆளுநர் நியமனம் நடைபெற்றுள்ளது. காவல் துறையில் குறிப்பாக உளவுத் துறை செயல்பாடுகளில் நீண்ட நெடிய அனுபவம் பெற்ற, தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஆர்.என். ரவியை தமிழகத்தின் ஆளுநராக மத்திய அரசு தேர்வு செய்திருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நீண்ட காலமாக நிலவி வந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்ததில் ஆர்.என் ரவியின் பங்கு முக்கியம் என கூறப்படுகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை சரணடைய வைத்து அமைதிப் பாதைக்கு திரும்ப வைப்பதில் முக்கிய பங்காற்றியவர் ரவி. பயங்கரவாத ஒழிப்பு மற்றும் அது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பை பெறுவதில் ஆர்.என்.ரவி மிகச்சிறந்த நிபுணர் எனவும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் அருகாமையில் உள்ள இலங்கையில் சீனா ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் விளைவுகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என வல்லுனர்கள் கருதுகிறார்கள். இது தவிர மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவும் மாநிலத்தில் ஆளும் கட்சியான திமுகவும் அரசியல் ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் எதிரெதிர் தளங்களில் உள்ள நிலையில் ஆர்.என்.ரவியின் நியமனம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆர்என் ரவியின் நியமனம் வழக்கமான அரசு ரீதியிலான செயல்பாடுகள் தவிர பாதுகாப்பு கண்ணோட்டத்திலும் முக்கியம் பெறுகிறது.