தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தங்களின் வாழ்வு செழிக்க வேண்டுமென கருதி, தண்ணீர் பொங்கி வரும் ஆற்றினை பெண்களும், விவசாயிகளும் வழிபடுவார்கள். ஈரோடு, கரூர், திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட காவிரி பாயும் பல்வேறு பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, மக்கள் புனித நீராட வருகை புரிவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புனித நீராடுவதற்காக வருவோர், அனுமதியில்லாத இடங்களில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கை கொண்டாட லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.