ஒன்பது வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : 3 பள்ளி மாணவர்கள் கைது
கோவை அருகே 9 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை சுந்தராபுரத்தையடுத்த பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 9 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி விடுமுறை காரணமாக 9 வயதுச் சிறுமி வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முதியவர் செல்வராஜ்(60) என்பவர் பள்ளி மாணவர்கள் மூன்று பேருடன் சேர்ந்து 9 வயதுச் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தனது தாயிடம் விவரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாய், இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறை விசாரித்ததில்,அதே பகுதியை சேர்ந்த முதியவர் செல்வராஜ் மற்றும் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் அந்த மூன்று பள்ளி மாணவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் முதியவர் செல்வராஜை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

