இ-பதிவில் திருமணப் பிரிவை நீக்கி மீண்டும் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நீக்கம்
தமிழக அரசின் இ - பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கிய பின், மீண்டும் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நீக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்து, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு நேற்று முதல் இ - பதிவு கட்டாயமாக்கப்பட்டது. குறிப்பாக, திருமணம், இறப்பு, மருத்துவம் சார்ந்த அவசர பணிகளுக்கு இ- பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இ-பதிவு இணையதளத்தில் இருந்து திருமணத்திற்கு பயணம் என்ற பிரிவு நேற்று நீக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்காக நிறைய பேர் விண்ணப்பிப்பதாகவும், அதிகம் பேர் வெளியில் வரக்கூடிய சூழல் இருப்பதால் அந்த பிரிவு நீக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதற்கு விமர்சனம் எழுந்த நிலையில், திருமணம் என்ற பிரிவு இ-பதிவுக்கான இணையதளத்தில் இன்று மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தது.
ஆனால் சில மணி நேரத்தில் மீண்டும் திருமணம் என்ற பிரிவு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதால், அரசு விளக்கமளிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.