'முழுவீச்சில் மீட்புப் பணி' : வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்குப்புக்கு உள்ளாகியுள்ளன. கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு, தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர். கஜா புயலுக்கு 46 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் 26 பேர், பெண்கள் 17 பேர், குழந்தைகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதோடு, தங்களது வீடு, கடைகள், கால்நடைகள், தோட்டம், விவசாய பயிர்கள் என அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து கையறு நிலையில் உள்ளனர். கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிப்புக்கான நிவாரணத்தொகையையும் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை சரி செய்யும் பணியில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முழு வீச்சில் ஈடுட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார். மேலும் புயலால் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 559 மரங்கள் சாய்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 39 ஆயிரத்து 938 மின் கம்பங்கள் சேதமடைந்திருப்பதாகவும், அதனை சரி செய்யும் பணியில் 13 ஆயிரத்து 629 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.