“அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டு இருக்கணும்” நீதிமன்றத்தில் மனு
அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவை அமைக்கக்கோரி வழக்கு. ஜல்லிக்கட்டு விழா அமைதியாக நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம் எனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் மனுதாரரையையும் சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல்நாள் அவனியாபுரத்தில் நடைபெறும். தற்போது சிறப்பு சட்டவரைவு காரணமாக ஜல்லிக்கட்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் விழாக் குழுவானது அமைக்கப்படவில்லை. அதனால் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து ஜல்லிக்கட்டு விழாக் குழுவை அமைக்க வேண்டும்.
கடந்த ஆண்டும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அனைவரையும் ஒருங்கிணைத்து விழாக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. ஆனால் ஒருசில அங்கீகரிக்கப்படாத குழுவினர் மட்டும் விழாக்குழுவில் அங்கத்தினராக உள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
ஆகவே அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவை அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள்,' ஜல்லிக்கட்டு விழா அமைதியாக நடைபெற வேண்டும் என்பதே நோக்கம் எனவே மனுதாரரையும் விழாக் குழுவில் சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.